Sunday 10 April 2022

ஆரணங்கு

 


என்னருமைத் தமிழினமே, பண்பாட்டுக் கூறுகளில், மரபுக் கூறுகளில் ஒவ்வொரு முறையும் இரு முனைத் தாக்குதலுக்கு ஆளாகிறாய். கூர்ந்து நோக்கினால் நாம் மூன்றாவதாகவே நின்று கொண்டிருக்கிறோம். இந்த முறையும் அப்படியே.

தமிழணங்கு தமிழ்த்தாய் யாரைத் தேடுவதானாலும் அதைத் தமிழில் இருந்துதான் தேடியாகவேண்டும். தமிழ் மரபுகளின் தலை மேட்டில் தான் அவள் இருப்பாள். நீண்டு கிடந்த நெய்தலிலும் நெடிதுயர்ந்த மலைகளிலும் நடந்து திரிந்து களித்திருப்பாள்.

இயற்கையின் பேராற்றலை உடலால் உணர்ந்த மனிதன் அதை ஒலியாலும் உணரக் கற்றுக்கொண்டான். பேரரருவிகளின் ஓசையைக் கொண்டே அதன் ஆற்றலைக் கணிக்க முற்பட்டான். 

காற்றின் ஓசையில் அதன் கனமறிந்தான். தோலின் மீது வெயிலின் தாக்கத்தால் உதட்டில் எழும்பிய ஒலியில் உணர்வு கண்டான். “சு” வென்றான் பின்னே சுள் சுர் சூர் என்றான்.

தொலைவில் கேட்ட ஒலியை ஒல் என்றான். ஒல் அல் அலம்பு. அலம்புதல் = ஒலித்தல். அல் அலு அலுங்கு அணுங்கு. அணுங்குதல் = முணுமுணுத்தல், ஒலித்தல். அலுங்கு அணுங்கு அணங்கு.

சூரும் அணங்கும் இயற்கையின் ஆற்றலைக் குறிக்க ஆதியில் தமிழன் வடித்த சொற்கள். சூர் நிறைந்த பெண் சூர்மகள் ஆனாள். தாய்த்தெய்வ வழிபாட்டில் சூரர மகளிர் ஆனார். ஆண் அன் விகுதி பெற்று சூரன் ஆனான்.

அணங்குடைச் சிலம்பு,  அணங்குடை நெடுங்கோடு,   சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடைச் சிலம்பு, சூருடை நனந்தலைச் சுனை போன்ற செவ்விலக்கிய சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும், அணங்கும் குடிகொண்டிருந்தன என்ற அக்கால மக்களின் நம்பிக்கைகளை பதிவு செய்துள்ளன.

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள சூர், அணங்கு என்ற ஆற்றல குறித்தான உருவகங்கள் பின்பு உருவான முல்லை மற்றும் மருதச் சமூகநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு பலவகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. உருவ/உருவக அமைப்புகளைக் கைக்கொண்டன. யாவரிலும் மூத்த சூர்மகள் இனத்துக்கும் மொழிக்கும் தாயானாள். பழையோள், மூத்தோள் எனப் பெயர் கொண்டாள். அவ்வை எனும் அம்மையானாள்.

ஒரு கட்டத்தில் தெளிவான வளர்ச்சியுற்ற தாய் வழிச் சமூகமாக கொற்றம் சூடிய போது கொற்றம் சூடிய அவ்வை கொற்றவையானாள். தமிழ் நிலத்தின் பண்பாடு, மொழி மற்றும் மரபுக் கூறுகளின் ஊற்றுக்கண்ணாக / தெய்வமாக மாறிப்போனாள்.

நம் இனத்தின் மொழியின் ஊற்றுக்கண்ணான தாயைத் தேடுவதானால் இறுதிக்கிறுதியாய் கொற்றவையிடமே சென்று சேர்ந்திருக்க வேண்டும்.

ஆண் தலைமையேற்ற சொத்துடமைச் சமூகத்தில் கூட போருக்குச் செல்கிற வேந்தன் வெற்றி பெறுதல் வேண்டி கொற்றவையின் பெருமைகளை எடுத்தியம்பி அத் தாய்த்தெய்வத்தை வழிபட்டுச் செல்லுகிற நிலை கொற்றவை நிலை என்பதை தொல்காப்பியம் மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்தகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே” எனும் நூற்பாவினால் எடுத்துரைக்கிறது.

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!

இழையணி சிறப்பின் பழையோள் குழவி! – எனும் திருமுருகாற்றுப்படை வரிகள் மருதத்தின் மலைமகளையும், முல்லையின் கொற்றவையையும், குறிஞ்சியின் பழையோளாகிய தாய்த் தெய்வத்தையும் வரிசைப் படுத்தி அப்படியானவளே முருகனின் தாய் என்கிறது.

செவ்விலக்கிய பாடல்களில் குறிஞ்சியில் இயற்றப்பட்ட பாடல்கள் பெரும்பகுதி இருக்கிறது. இன்றைய தொல்லியல் ஆய்வுகளும் இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் தொடங்கி, நடுகல் வரை ஆய்வு செய்து வெளிப்படுத்தியிருக்கிறது.

தொல்லியல் ஆய்வின் வழிமுறைகளில் முகாமையானது மரபுக் கூறுகள். அதன் வழியேயான பயணமே சிறப்பான முடிவுகளைத் தரும் / தந்திருக்கிறது. அவற்றை உறுதி செய்ய செவ்விலக்கியங்களைப் பயன்படுத்தினால் ஏராளமான புதிர்கள் விடுபடுகின்றன.

இத்தனைச் சிறப்பான மரபை மேலும் எடுத்துச் செல்வதே நமது செயலாக, பணியாக இருத்தல் சிறப்பு.

ஆனால் இந்த இரண்டு படங்களுமே மரபை மறுதலித்தது போன்றே தோற்றம் தருகின்றன. இரண்டு படங்களும் கேள்விக்குரியவையே.

தமிழ்த்தாய் எனும் படத்தில் உடல் வண்ணம், தமிழ் மண்ணின் மாந்த வண்ணமின்றி, மண்ணோடு ஒட்டுதலின்றி இருக்கிறது. ஆனால் அணங்கின் படம் தமிழர் வண்ணத்திலேயே இருக்கிறது.

தமிழ்த்தாய் அணிந்திருக்கும் சிவப்பு வண்ணச் சீலை திருமுருகாற்றுப்படை தொடங்கிய செவ்விலக்கியப் பாடல்களில், தமிழர் மெய்யியல் மற்றும் வழிபாடுகளில் அணியப்பட்ட ஆடை மற்றும் வழிபாட்டு முறைகளின் மரபில் சொல்லப்பட்ட வண்ணமாக இருக்கிறது. இரண்டாவது படத்தின் வெள்ளாடை அப்படியான மரபுப் பொருளில் எங்கும் பயன்படுத்தப் படவில்லை. (வைதீகத்தின் நுழைவுக்கு முன்பாக). மேலும் அச்சந்தரும் அணங்கு எனும் நிலைக்கு வெள்ளாடை முற்றிலும் பொருத்தமாயில்லை.

இயல்பில் பழையோள் அணங்கு நிலையையும் அடைந்திருப்பாள். அன்றி அவள் கொற்றவையாக இருத்தல் இயலாது. எனில் ஆயுதம் தேவையாகிறது. முதல் படத்தில் அது இல்லை. இரண்டாவதில் “ழ்”கர முனை(?) கொண்ட குச்சி. கலித்தொகையில் “பெருங்காட்டுக் கொற்றி” என அழைக்கப் பட்ட ஆரணங்கு இப்படி மழுங்கிய ஆயுதம் கொண்டா நடப்பாள். மரபின் “சூர்” அறுத்தெறியப் பார்க்கிறார்கள் போலும்.

 “ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,

கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ

விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை,

கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி” (சிலம்பு)

அப்படி நாம் கைதொழுத அணங்கே தமிழணங்கு. ஆதிச்ச நல்லூர் பானையோட்டில் கூட அருகே ஒரு கலைமானோடு தாய்த்தெய்வம் குறிக்கப்பட்டிருந்தாள்.

இன்னொன்று. மனோன்மணீயம் நூலின் பாயிரத்தின் கடவுள் வணக்கம் இப்படித் தொடங்குகிறது.

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்

போதமும் போய்த்தீண்டாப் பூரணமே

வேத மறுப்பில் தான் தொடங்குகின்றன ஐயா பெ.சுந்தரம்பிள்ளையின் வரிகள். பன்னிரெண்டு வரிகளில் தமிழ்நாட்டரசு விட்டுவிட்ட ஐந்து வரிகள் போக, ஐயா எழுதிய ஆறடித் தரவு ஏழடியாய்ப் போனது. இன்னும் தொடரும் பன்னிரெண்டு வரிகளை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. பாயிரத்தின் இறுதி அடிகள் கீழே.

"பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே.       

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி.

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ."

இதையேனும் படித்துவிட்டுப் படம் வரைய அமர்ந்தால் பத்துப்பட்டைப் படிக்கத் தோன்றும். அணங்கு யாரென அறிதலும் இயலும்.

இந்த இரண்டு படங்களுமே தமிழணங்கைக் குறிப்பதில் மரபுப்பிழை செய்திருக்கின்றன என்பதை கற்றார் மறுக்கமாட்டார் என எண்ணுகிறேன்.

வேத சிகையும் விரிகலையும்” தீண்டிவரைந்த

மூத்தோள்தன் முகப்பட மிரண்டும் பிழையே”

 


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்