Monday 4 April 2022

தாலாட்டு

 


(பிரிந்திசை, துள்ளல் ஓசை,  வெண்கலிப்பா, கலித்தாழிசை)

படம்: மறைமலை வேலனார்

 

 

மண்தோன்றா காலம் தென்னாடு போலே

என்னாளும் வாழும் உன்பேரும் நாளும்

வடமலையின் தண்பனியே

தாலேலோ தாலேலோ

வான்பொழியும் மாமழையே

ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

 

குமரிமக்கள் வாழ்வியலே

கொடுந்தமிழின் பேரறமே

குறள்பிறந்த பேரறிவே

புறம்இசைத்தப் போரறமே 

அகமுரைக்கும் நானூறே

ஐம்பெருங் காப்பியமே

பதினெட்டுக் கீழ்க்கணக்கே

பைந்தமிழ்பத் துப்பாட்டே 

 

வெண்பட்டால் நானும் பொன்னூஞ்சல் கட்டி

தன்பாட்டும் பாடி தாலாட்டு வேனே

தென்மொழியின் நன்மகனே

தாலேலோ தாலேலோ

தென்திசையின் மன்னவனே

ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )

 

உறையூரின் மென்துகிலே

மறைமலையார் தனிமொழியே

பாண்டியனார் நன்முத்தே

பாவாணர் தமிழ்ச்சொல்லே

 சேரமண்ணின் குறுமிளகே

சித்திரனார் பாவீச்சே

கீழடியின் நன்மணியே

கிஆபெ குறள்விரிவே

 

தென்பெண்ணைக் காற்றின் பண்ணத்திப் பாட்டே

வண்ணங்கள் காட்டும் சென்னிமகன் தேரே

தென்கடலின் பொன்மகளே

தாலேலோ தாலேலோ

தொன்மதுரைக் கயல்விழியே

ஆராரோ ஆராரோ  ( மண்தோன்றா )

 

தென்மொழித் திரவியமே

சிந்துவெளித் தமிழறிவே

சுமேரியச் சொற்கூட்டே

சொல்பிறந்த நல்லுலகே

 மயக்கும்நல்ல பறையொலியே

மாண்புறு தமிழிசையே

பண்ணேஎன் பழந்தமிழே

பார்போற்றும் தாய்மொழியே

 

மூன்றுதமிழ் போலே வாழ்வாங்கு வாழ

வேல்காரன் தானும் மேற்காவல் தானே

பொன்வரையின் கார்முகிலே

தாலேலோ தாலேலோ

பொதியமலைத் தேனூற்றே
ஆராரோ ஆராரோ    ( மண்தோன்றா )


2 comments:

  1. சிறப்பு மிகவும் சிறப்பு நல்வாழ்த்துகள் ஐயா
    மிகவும் நன்றிங்க ஐயா
    ------------------------------------
    அருதனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்