Monday 2 December 2019

காணாமல் போன கதை - தொடர் 2

     அந்துவனின் கையில் இருந்த கொட்டாப்புளி சீராக உளியின் மேல் இறங்கிக் கொண்டிருந்தது. அது சிறு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த காவிரியின் நீர்ச் சுழலின் ஓசையோடு கலந்து அருகே இருந்த பெரிய மருத மரங்களின் பொந்துகளில் எதிரொலித்தது. அதற்குள்ளிருந்த கிளிகள் படபடவென சிறகசைத்து இணையிசை எழுப்பின. அதனோடு சேர்ந்து சூட்டிறைச்சியின் புழுக்கு மணமும், பொரிக்கறி கொதிக்கும் மணமும், வெந்து விரிந்த வெண்ணெல் அரிசிச் சோற்றின் மணமும் கலந்து மீண்டுவந்து அந்துவனின் செவியையும் மூக்கையும் தொட்டுத் துழாவின. கதிரவன் உச்சியைக் கடந்து மூன்று நாழிகை ஆகிவிட்டது. அவன் உளியைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான். சுற்றிலும் வேலை செய்து கொண்டிருந்த எல்லோரையும் பார்த்தான்.

"எல்லோரும் உண்டுவிட்டு சிறிது கண்ணயர்ந்து அதன் பின் வேலை செய்யலாம்.... செல்லுங்கள்" - என்று கூறிவிட்டு காவிரியை நோக்கி நடந்தான். 

  குளிக்காமல் அவன் உணவருந்துவதில்லை. கல்லணை கட்டிய முன்னோர்கள் வகுத்துவைத்த சில விதிகளை அந்துவன் மீறுவதில்லை. அதில் ஒன்று தான் இது. காலகாலமாக சோழமண்ணின் கற்றளிகளைக் கட்டி, கற்சிறைகளைக் கட்டி அறிவில் சிறந்து நிற்கும் தச்சர் கூட்டத்தின் தலைமுறையில் வந்தவன். இவனது பாட்டனார்தான் இந்த இடத்தை தேர்வு செய்தவர். மன்னன் செங்கணானிடம் மதிப்பு கொண்டவர். மன்னனுக்கும் அவர் மீது அளவற்ற அன்பும் திறமையின் மேல் மதிப்பும் உண்டு. இதுவரை கட்டப்பட்ட ஏராளமான கோயில்களுக்கு இடத்தேர்வும், கற்றளி அமைப்பும் மட்டுமே வகுத்துக் கொடுத்தவரை, ஆனைக்காவில் கட்டவிரும்பிய கோயிலுக்கு மட்டும் முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளும்படி மன்னன் கேட்டுக்கொண்டான். ஆம் இது வெறும் வழிபடும் கோயிலாக இருக்கப் போவதில்லை. கரைபுரண்டு ஓடும் காவிரியின் வெள்ளச் சமநிலைக்கான ஏற்பாடாகவே இருக்கும். சமநிலை அளவுகளைக் கண்காணிக்கும் இடமாக இது இருக்கும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மன்னன் செங்கணான் செய்துகொண்டிருந்தார். 

       அகலமான நெடுந்தெருக்கள். அதனுள்ளே வாழ்விடங்கள். குடிநீர் அமைப்புகள், தோட்டங்கள், அளவீட்டுக் குளம், மக்கள் குறைகேட்டறிந்து தீர்த்துவைக்கும் அரசு மண்டபங்கள், காவிரியின் கரையை விட உயரமான பாதுகாப்பிடங்கள் என பேரூராய் இருப்பதற்கான எல்லா வேலைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. பாட்டனின் அறிவுரைப்படியும் மன்னனின் விருப்பப்படியும் இதைச் சீராகச் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு அந்துவனுக்கு இருந்தது. அந்த நினைப்போடு நடந்தவன் எதிர்ப்பட்ட தென்னந்தோப்பு ஒன்றில் நுழைந்து சிறிய மேடு ஒன்றில் ஏறினான். எதிரே...  ஓடும் கடலாய் விரிந்தாள் காவிரி. இறங்கி நீராடி முடித்து மீண்டான். தெற்குப்புறப் பாதையின் இறுதியில் இருக்கும் பட்டகசாலை நோக்கி நடந்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போதே பட்டகசாலையின் வெளியே மூன்று குதிரைகள் நிற்பதைப் பார்த்தான். ஒருவரும் வருவதாகச் செய்தி ஏதும் இல்லையே. யார் வந்திருப்பார்கள் என்று எண்ணியவாறே பட்டக சாலையினுள் நுழைந்தான். உள்ளே ஒருவன் அமர்ந்திருக்க இருவர் நின்று கொண்டிருந்தார்கள். அமர்ந்திருந்தவன் அந்துவனைக் கண்டவுடன் 

"வணக்கம் தச்சரே" என்றவாறு எழுந்து வணங்கினான்.

"பழையனா?  வருக வருக. நானும் யாரோ என்று எண்ணிக்கொண்டே வந்தேன். அமருங்கள் உணவு உண்ணலாம்"

உள்ளே இருந்து வந்த ஒருவன் இலை போட்டு சோறு படைத்தான். அந்துவன் அவனை நோக்கி "மலையா..... படைத்தலைவர் வந்திருக்கிறார் என்ற செய்தியை காவிரிக்கரைக்குச் சொல்லியனுப்பிருக்கக் கூடாதா?"

"அவன் சொல்ல ஆயத்தமானான். நான்தான் நீங்கள் நீராடி முடித்து வரட்டும் என்று அவனைத் தடுத்தேன்" என்றான் பழையன். செங்கணான் அரசின் படைத்தலைவன். பெரு வீரன். 

"என்ன சட்டென்று... திருமுகம் ஏதும் இல்லாமல்.."

"ஆனைக்கா வேலைகளை அடுத்த திருமுகம் வரும் வரை நிறுத்தி வைக்கச் சொல்லி மன்னரின் ஆணை தச்சரே"

    பிசைந்த கவளத்தோடு உயர்ந்த அந்துவனின் கை சட்டெனத் தாழ்ந்தது. முகத்தில் இனம்புரியாத உணர்ச்சியின் வரிகள். கண்ணில் வியப்பும் கவலையும் கலந்த வண்ணம்.

"என்ன ஆயிற்று"

"நீர் கவலை கொள்ளவேண்டாம் தச்சரே. கொங்குமண்டலத்தின் வடமேற்கில் இருந்து ஒரு அறைகூவல். அதனால்..."

"அதனால்..."

"ஒரு போருக்கு அணியமாகிக் கொண்டிருக்கிறது சோழப்படை. கூடவே  மன்னரும்."

"ஓ... இங்கிருந்து யாரையும் அழைத்துப் போகிறீர்களா?"

"விருப்பமிருப்பவர் வரலாம் என்பது ஆணை. வெளிப்படுத்திவிட்டேன். வருபவரை இட்டுச் செல்ல வேண்டும்"

"ம்.. நான் என்ன செய்வது?"

"உறையூர் மன்றத்திற் சென்று தங்கியிருக்க வேண்டி செய்தி விடுத்தார் மன்னன்."

"நல்லது அப்படியே ஆகட்டும்"

      நான்கைந்து நாட்களில் மேற்குநோக்கி சோழனின் படைகள் நடக்க ஆரம்பித்தன. வடக்கிருந்து தமிழகத்தின் உள்நுழைவோரால் வடவெல்லையில் குழப்பங்கள் வரலாம் என்று சோழ மன்னனுக்கு எண்ணமிருந்தது. கற்றோர் அவையும் அதையே உறுதிப்படுத்தி இருந்தது. சோழப் படைகளில் பெரும் போர்கள் எதுவும் பார்க்காத படை என்றால் அது செங்கணான் படைகளே. பெரு வலியும் பெரும்படையும் அவனது திறனும் அறிந்திருந்த அயல் மன்னர் எவரும் இவனோடு பகை கொள்ளும் சிந்தையின்றியே இருந்தார்கள். அதனால் அவனும் நுண்கலையும், அறிவியலும் இணைத்து ஏராளமான கற்றளிகளை ஏற்படுத்துவதில் நாட்டம் கொண்டு அதையே செய்து கொண்டிருந்தான்.

    ஆனால், இப்பொழுது வடபுலத்து மன்னர் சிலருடன் கைகோர்த்துக் கொண்டு கொங்கின் வட பகுதியில் நல்லினி என்றொருவன் சோணாட்டிற்கு எதிராக சில வேலைகளைச் செய்கிறான் என்று செய்தி கிடைத்திருக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அவையம் அறிவுறுத்தியது. அதனாலேயே இந்த ஏற்பாடு. அவனும் கொங்கு மண்டலத்தில் நிலை பெற்றிருந்தவனல்ல. முன்பு குடநாட்டிற்கும் கொண்காண நாட்டிற்கும் இடையிலிருந்த மூவனின் வழித்தோன்றல்களாக இருக்கக் கூடும்  என்றுதான் கேள்வி. மூவன், சேரமான் குட்டுவன் கோதையின் பெயரன் கணையனால் தோற்கடிக்கப்பட்டச் செய்தியை புலவர் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின் அவன் எங்கு சென்றான் எனத் தெரியவில்லை. இப்பொழுது அவன் வழித்தோன்றல் என ஐயமிருக்கும் ஒருவன் கலகம் செய்கிறான். ஐந்து நாட்களுக்குள் படை சென்று அவன் கதை முடித்து மீளவேண்டும் என்று திட்டம்.

      ஏராளமான எண்ணிக்கையில் குதிரைப்படையும், வலுவான யானைப் படையும் பெரும் எண்ணிக்கையில் ஆள்படையும், கலகத்தை மட்டுமே கோளாய்க் கொண்டிருக்கும் நல்லினிக்கு தேவையில்லைதான். ஆனால் யாரும் அறியாது வடபுல சேனைகள் ஏதேனும் சட்டென்று, இவர்களுடன் சேர்ந்து  நுழைய அணியப் பட்டிருந்தால் என்ன செய்வது. அதுவுமன்றி நீண்ட நாள்களாக அச்சமுற்று அமைதியாய் இருந்த நாட்டில் கலகக் குரல் எழக்கண்டதால், ஒரு முறை படை நடத்தி அதைச் சீர் செய்துகொள்ள செங்கணான் முடிவுசெய்திருந்தான். கற்றளிகள் செய்து கொண்டிருந்த மன்னன் களிற்றின் மீதேறி படை நடத்துவதை காவிரியின் தென்கரையும் வடகரையும் வியந்து பார்த்தது.

        புகாரிலிருந்து புறப்பட்ட ஐந்தாம் நாள் காலை. கூடகாரத்தில் செங்கணான் அமர்ந்திருக்க எதிரே பழையன் நின்றுகொண்டிருக்கிறான்.

"மன்னா நான் படைகொண்டு சென்று வினை முடிக்கிறேன். தாங்கள் இங்கேயே இருங்கள்"
  
"இல்லை. நானும் வருகிறேன். அவனை நானும் பார்க்க வேண்டும்"

"அவ்வளவு தானே மன்னா, அவனையும் அவன் கூட்டத்தையும் தளைப்படுத்தி உங்கள் முன்னே கொண்டு சேர்க்கிறேன். நீங்கள் நேரில்  வருமளவுக்கு அவன் வலுவானவனில்லை"

"சரி... ஆகட்டும்"

     நடந்ததை போர் என்று சொல்லமுடியுமா தெரியவில்லை.  கலகம் செய்தவர்களும் முகமறிந்தவர்களாய் இல்லை. பொழுது உச்சிக்கு ஏறும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நல்லினியும் அவனது கூட்டமும் தளைசெய்யப்பட்டு செங்கணான் முன்னே அழைத்துவரப்பட்டார்கள். தன் முன்னே நின்றிருந்த நல்லியனை ஏறிட்டுப் பார்த்தான் மன்னன். பதினாறு பதினேழுக்குள் பருவம் இருக்கும். அருகில் ஒரு பெரியவர் நின்றிருந்தார். சோர்வினால் அவரது தலை சற்று தாழ்ந்திருந்தது. தோளில் பையொன்று தொங்கிக் கொண்டிருந்தது.

"நீ...  மூவனின் வழித்தோன்றல் தானே. எதற்காக சோணாட்டிற்கெதிராக இந்தச் செயலைச் செய்கிறாய்"

"மன்னா. நான் மூவனின் நாட்டிலிருந்தவனே, அன்றி அவரது வழித்தோன்றலில்லை. அவருக்கும் சேரமானுக்கும் இடையே ஏற்பட்ட போர்ச் சூழலால் நானும் என் பாட்டனும் இன்னும் சிலரும் இங்கு வந்துவிட்டோம்"

"பிறகு எதற்காக இந்த வேலை"

"நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதறிந்து வானவாசி வீரர் சிலர் எம்மோடு சேர்ந்துகொண்டு... இதைச் செய்தால் பிடிபடும் பகுதியில் சிறு பங்கொன்றைத் தருகிறோம் என்றார்கள். அதனால் தான்...." சிறிது அச்சத்துடன் அவன் குரல் உடைந்தது.

தலைதாழ்த்தி நின்றிருந்த பெரியவரை நோக்கினான் செங்கணான்.

"உமது பையில் என்ன வைத்திருக்கிறீர். ஆயுதமா?"

பெரியவருக்குச் சட்டென குரலெழும்ப வில்லை.

"இல்லை மன்னனா. ஆயுதமில்லை.  தச்சுப்பொறிகள். நான் தச்சன். மரவேலை செய்பவன்"

"சேர நாட்டுத் தச்சர்கள் மரத்திலேயே பெரிய ஆயுதங்களைச் செய்து விடுவீர்களே....ம்"

"மன்னா.. நான் கோயில் மரக்கூட்டு வேலை செய்பவன். ஆயுதம் செய்பவனல்ல."

"நீர் எப்படி இந்தக் கூட்டத்திற்குள்"

"மன்னா.. யாருமில்லாத நல்லியனை நான் தான் வளர்த்தேன்"

ஓ..அதனால் தான் உயிர் பயமின்றி அவனுடன் இருக்கிறீரோ" 

"இல்லை மன்னா... இவனை விட்டால் எனக்கும் வேறு புகலிடமில்லை"

'ஓ.."

     சிந்தனையில் ஆழ்ந்தான் செங்கணான். சற்று நேரத்தில் பழையனின் பக்கம் திரும்பி

"பழையா"

"சொல்லுங்கள் மன்னா"

'இவர்களை ஆனைக்காவிற்கு இட்டுச் செல்"

"மன்னா... !!!"

"தீவுக்குள் ஏதும் நிகழ்த்த இயலாது. நமது காவலும் அதிகம்."

"ஆகட்டும் மன்னா"

      பழையனும் படையின் ஒரு பகுதியும் சூழ, செங்கணான் முன்னே புறப்பட்டுச்செல்ல நல்லியனின் சிறிய கூட்டத்தை அழைத்துக் கொண்டு மிகுதிப் படையும் நடக்க ஆரம்பித்தது. நல்லியனும் பெரியவரும் அருகருகே நடந்து கொண்டிருந்தார்கள்.

"நல்லி..... உனக்கு கவலையாக இருக்கிறதா?"

"இல்லை மூப்பில். நீங்கள் இதெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்று தானே முன்பே சொல்லியிருக்கிறீர்கள்."

"ம்.... ம்...  இந்தா இனி இதை நீயே வைத்துக் கொள்" - என்று பைக்குள் கைவிட்டு திடமான கருநூலில் கோர்க்கப்பட்ட சிறிய மாலை ஒன்றை வெளியே எடுத்து நல்லியனிடம் நீட்டினான்.  அதை வாங்கி ஒருமுறை ஊன்றிப் பார்த்துவிட்டு கழுத்தில் அணிந்துகொண்டான் நல்லியன். அந்தக் காட்டுப் பாதையில் நடக்கையில் இடதும் வலதுமாக அவனது மார்பில் ஆடிக்கொண்டிருந்தன, பித்தளைப் பூண் இடப்பட்டு கோர்க்கப்பட்டிருந்த ஒரு மனிதனின் இரண்டு சிங்கப்பற்கள்.

.......................................  தொடரும்  .....................

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்