Wednesday 4 December 2019

காணாமல் போன கதை - தொடர் 3

     "என்ன கணையா... கோட்டை வாயில்கதவில் மனிதப் பற்களைப் பார்த்தேன் என்றவுடன் திகைக்கிறாய். அது ஊர் அறிந்தது தானே" - என்று பொய்கையார் சொன்னதும் கணைக்கால் இரும்பொறை மெல்ல இயல்புக்குத் திரும்பினான். 

"இல்லை ஐயா. ஒரு மனிதனுடைய பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து அவரை அவமானப்படுத்துவது அத்துணை சரியானதல்ல என்பது போல் இருந்தது தங்கள் முக வெளிப்பாடு. அதனால் தான்...."

"உண்மைதான் கணை. ஒருவனை வெல்லுதல் வீரமாகக் கருதப்படலாம். ஆனால், அவனை இகழ்வதற்காகச் செய்யப்படும் இதுபோன்ற செயல்களை அத்துணை உயர்வானதென்று நூலறிந்தோர் போற்றுவதில்லை"

"ஐயா.. பெரும்புலவன் மாமூலனார் பாட்டொன்று இதற்கு முன்னே இது போன்றதொரு செயல் நடந்ததைச் சொல்கிறதென்று அவையில் சிலர் சொன்னார்களே"

"புறத்திணைப் பாடலா?".... ஆழ்ந்து விடை தேடும் நோக்கில் இருந்தது வினா.

"இல்லை ஐயா. அகத்திணை என்றுதான் சொன்னார்கள்"

"கணை... பெரும்புலவர்கள் பண்டைய மரபு நூல்களின் வழி ஒழுகுபவர்கள். எல்லாவற்றையும் போற்றுவதில்லை. கடுஞ்சொல் கூறாது வேறு சொற்கொண்டுகூட அதை மென்மையாக இடித்துரைப்பார்கள். அங்கு நடந்த நிகழ்வை நீ அறிவாயா?"

"முழுவதுமாக இல்லை ஐயா"... என்றவனின் உள்ளத்தில் பொய்கையாரிடமிருந்து அதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

"வேளாண்மையைப் பெருக்கிய சோழர்களுக்கு நாடுகாவல் முகாமையானது. சேர நாட்டைப் போல யானைப் படையும் தேவையானது. பெருங்களிறுகளைக் காட்டில் இருந்து பிடித்துவருவது அவர்களுக்கு கடினமான வேலையாக இருந்தது. வேளிர் சிலரே உதவியிருக்கிறார்கள். ஒருமுறை எழினி என்பவன் சோழவேந்தனுக்கு யானைவேட்டை நிகழ்த்த மறுத்துவிட்டான். நீலமலையின் வடக்கிருந்து வந்த இந்தச் செய்தியை அறிந்த பூம்புகாரின் மன்னன் சினம் கொண்டான். கழார்த்துறையின் தலைவன் மத்தியை அழைத்து எழினி தன்னை மதியாது இகழ்ந்து பேசியதைச் சொல்லி அவனைப் பிடித்து வருமாறு சொன்னான்."

"என்றால்.. மத்தி நீலமலைக்கு வந்தானா?"

"ஆம். படைகொண்டு வந்தான். மத்தி பரதவர் தலைவன். கடலோடி. வேறு தேயங்களுக்குப் போய் பழக்கப் பட்டவன். கடல்நடுவே பிடிபடும் கொள்ளையர்களை மீண்டும் அடையாளம் காணும் முகமாக அவர்களின்  முன்பற்களைப் பிடுங்கிவிடும் பழக்கம் அறிந்தவன். எல்லாவற்றையும் விட சோழன் மேல் மிகுந்த மதிப்புகொண்டவன். வேகமாகப் போரிட்டு எழினியைப் பிடித்து அவனது பற்களைப் பிடுங்கிவிட்டான். அதை சோணாட்டின் வெண்மணி எனும் ஊர் வாயில்கதவில் பதித்து விட்டான். அப்படியென்றால் எழினி எத்துணை வலியவனாக இருந்திருக்க வேண்டும். இந்த அவமானம் தாங்காது அவன் என்ன செய்தான் என்று அறிதல் இயலவில்லை. நானறிந்து இது போன்ற நிலைகளில் தமிழரசர்கள் உயிரை விட்டுவிடுவார்கள்"

      நெஞ்சுக்குள் ஏதோ தைத்தது போலிருந்தது இரும்பொறைக்கு. உள்ளுக்குள் ஒருநூறு வினாக்கள் எழுந்தன. இவரிடம் கண்டிப்பாகக் கேட்டுவிடவேண்டும் என்று தோன்றியது.

"ஐயா... அரசுக் கட்டமைப்புகள் ஏற்படும்போது இது போன்ற நிகழ்வுகள் இயல்புதானே.. தவிர்க்க இயலாதது தானே"

"நீ... சேர நாட்டு நிலையைச் சொல்கிறாய் என எண்ணுகிறேன். தமிழகத்தின்கண் முதலில் பெருமன்னனாக வர விரும்பி சில நடவடிக்கைகளை சேரர்கள் எடுத்தார்கள். ஆனால், அது போராக இல்லாமல் ஒரு உடன்படிக்கையாகவே இருந்தது. ஆய் நாட்டின் வடக்கிலிருந்து வானியாற்றுக்கரைவரை... அதாவது கொண்காணநாட்டிற்கு வடபகுதிவரை எட்டு பகுதிகளாகப் பிரிந்து தனித்தனியாக இருந்த சேரர் குடிகள், கடற்பகுதிகளிலும், வடமலைப்பகுதிகளிலும் பகைவர்களின் தாக்குதல் பொறாது ஒன்றாய் இணைந்து காவல்செய்ய முனைந்தனர். தங்களுக்குள் முறைவைத்து ஆளும் விதமாக ஏழு மணிமுடிகளை ஒற்றை ஆரமாகச் செய்து எட்டாவது மணிமுடி சூடுபவருக்கு அணிவிக்கும் வழக்கத்தைக் கொண்டார்கள். இதுவே தமிழ்கூறும் நல்லுலகில் எண்பேராயம் என முதலில் அழைக்கப்பெற்றது. ஆனாலும், அந்த உடன்படிக்கையில் இவர் எண்மரைத் தவிர வேறு சிலர் அல்லலுற்றார்கள் என்பது மறுப்பதற்கில்லை"

      பேசிக்கொண்டே நடந்ததில் கோட்டையின் பெரும்பகுதியைத் தாண்டி அறப்புரையின் அருகில் வந்துவிட்டார்கள். உள்ளே மாலைநேர உணவு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கழுமலம் கோட்டையில் இப்பொழுது ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
 
யானைகளுக்குச் சோறாக்கும் ஆக்குப்புரை ஒன்றும் பெரிதாக இருக்கிறது. மாந்தையில் இறக்கிக் கொண்டுவரப்பெற்ற கழுத்துமயிர் சிலிர்க்கும் குதிரைகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளைப் பராமரிப்பதற்கு கோஇல்கோடு மலையடிவாரத்திலிருந்து பலரை அழைத்து வந்திருக்கிறார்கள். எல்லோருக்குமான உணவு சமைக்க தனியாக சிலர் இங்கிருக்கிறார்கள்.

"என்ன கணை.. சென்று குளித்துவிட்டு வருகிறாயா?  சோறு உண்ணலாம்"

"வருகிறேன் ஐயா.. நீங்கள் காத்திருக்க வேண்டாம். உண்ணுங்கள்"

"இன்னும் பல்லெறிந்த கதையை நீ சொல்லவில்லையே.. அதைக் கேடுக்கொண்டே உண்ணலாம் என நினைத்தேன்."

"ஐயா... நீங்கள் அறிந்தது தானே. நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு."

"யார் வாய் கேட்பதிலும் அதை உன் வாயால் கேட்பதே நன்று. அதனால்தான்...'

"விரைந்து வருகிறேன் ஐயா"

       இயற்கையாக இருந்த ஒரு சுனையை செப்பனிட்டு மூன்று புறங்களிலும் கல்லெடுத்து, படித்துறை செய்து நீராவி போன்று இருந்த அந்தக் குளம் மாலை வெயிலின் இறுதி வெளிச்சத்தில் மின்னியது. சில்லிட்டுக் கிடந்த அந்த நீரில் இறங்கினான் இரும்பொறை. அடிவயிற்றை நீர் தொடும்போது உச்சி குளிர்ந்து உள்ளம் இலகுவானது போன்று உணர்ந்தான். மெல்ல மூச்சடக்கி முழுகினான்.  தந்தை இதற்குள் முசிறியைத் தொட்டிருப்பார். அங்கு தங்கிவிட்டு நாளை பொழுதில் தொண்டிக்குச் செல்வார் என்ற எண்ணம் தோன்ற நீருக்குள்ளிருந்து வெளிப்பட்டான். சுற்றிலும் எழுப்பிய சிற்றலைகள் மெதுவாகக் கல்சுவற்றைத் தொட்டன. சுவற்றின் கல்லிடுக்கு ஒன்றின் உள்ளிருந்து ஒரு நீர்ப்பாம்பு தவளையின் அசைவோ என்று நினைத்து தலையை வெளியே நீட்டியது. ஏதும் இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் இடைவெளிக்குள் உடலை மறைத்துக் கொண்டது. இரண்டு மூன்று முறை முங்கி எழுந்தான். உடல் குளிர்ச்சியடைந்து சிந்தனை இன்னும் தெளிவானது போல் தோன்றிற்று.

   பொய்கையார்.... ஏதோ மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அன்று ஒருவனின் ஆணவத்தை அடக்க எண்ணியே அந்தச் செயலைச் செய்தான். ஆனால், அதை புலவர் உளமுவந்து ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவனால் உணர முடிந்தது. ஒளி முழுவதும் குறைந்து பத்தடி தொலைவில் இருப்பதை சட்டென்று காணமுடியாத வேளையாகிவிட்டது. பொய்கையாரும் காத்துக் கொண்டிருப்பார். செல்லவேண்டும். என்று எண்ணியவாறு பொறையன் நடக்க ஆரம்பித்தான்.

   அதே வேளை தொண்டியின் வாயிலருகே ஒரு முதியவரும் பருவப் பெண்ணொருத்தியும் வந்து சேர்ந்தார்கள். கதவை அடைக்க ஆயத்தமாகி நின்ற வாயில் காப்போன் - "யாரையா நீவிர்.. இந்த வேளையில்..."

"ஐயா.. நான் கொண்காணத்துப் பாணன். இவள் என் பெயர்த்தி. மன்னரைக் காணவேண்டும்"

"மன்னர் நாளைதான் வருவார். சென்று நாளை பொழுதில் வாருங்கள்"

"இளையவர்..."

"அவருந்தான்... வெளிச்சத்திரத்தில் தங்கிவிட்டு பொழுதில் வாருங்கள்" - என்று சொல்லியவாறே அந்தப் பெருங்கதவை மூடினான். மூடிய கதவைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பார்வையில் பட்டது அது.

"தாத்தா... அந்தக் கதவில் என்ன பதிந்திருக்கிறது. பார்த்துச் சொல்.."

"எயினி... செழிப்புமிகுந்த தொண்டி நகரின் கதவில் என்ன இருக்கும். பாண்டி முத்தோ, கொங்கின் வைடூரியமோ இருக்கும். நன்றாகப் பார்."

"நான் நன்றாகப் பார்த்துதான் கேட்கிறேன். உனக்குதான் வயதாகிவிட்டது. வெளிச்சக் குறைவும் இருப்பதால் உன்னால் பார்க்க முடியவில்லை. அது வேறு ஏதோ! நரிப்பல் போல இருக்கிறது."

"சரி... சரி.. விடு எயினி. கண் மங்கிவிட்டது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.  நாளை வரத்தானே போகிறோம். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். நட. வேளையாகிறது"

"அப்படி வா வழிக்கு .." என்று சிரித்தவள் நடக்க ஆரம்பித்தாள்.

    வெளித்தெருக்களில் ஏராளமான வீடுகள் இருந்தன. அதில் சத்திரத்துவீடு எதுவென்று தேடி நடந்து கொண்டிருந்தனர் இருவரும். எயினிக்கு கதவில் என்னதான் பதித்திருக்கிறது என்று எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததை அறிந்த  முதியவரோ அவளைப் பார்ர்த்து உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார் -  "அது நரிப்பல் அல்ல பெண்ணே... ஒரு மனிதனின் பல். மானமுள்ள ஒரு மனிதனின் பல்"

..................... தொடரும்................

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்