Wednesday 11 December 2019

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

 
     கைபேசிகள் இல்லாத காலத்தில் கடைசி இரயிலில் ஏறி பிரிந்து செல்லும் காதலனை கண்கொட்டாமல் பார்த்து நின்று, கடைசிப் பெட்டி கண்ணில் இருந்து மறைந்த பின்னும் கை அசைத்து நிற்கும் பெண்ணைப்போல பார்வையாளனைக் கட்டிப்போடும் திரைப் படங்கள் நல்ல படங்கள் என்று கருதுகிறேன். அப்படியான சில வண்டிகள் எப்போதேனும் நம் நிலையங்களில் வந்து நிற்கும். அதில் ஒன்று இது.

   வெகு காலமாக கதைகளைப் பற்றியான உன்னதக் கதைகள் இங்கே ஏராளமாகப் புனையப்பட்டுக் கிடக்கின்றன. அவ்வப்போது யாரோ வந்து அவற்றின் உன்னதங்களை உதறியெறிந்துவிட்டு  தூசிதட்டி அவற்றின் உண்மை உருவத்தை வெளி உலகிற்குக் காட்டுகிறார்கள். அவர்கள் வரிசையில் இயக்குநர் அதியன் ஆதிரையும் இணைகிறார். நீண்டகாலமாக தொட்டுக் காட்டப்படாத மண்வாசனை அவர் மீது வீசுகிறது.



   இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகள் இன்றும் எங்கேயோ வெடித்துக் கொண்டிருக்கின்றன. உயிர்ப்பலி வாங்குகின்றன என்று தொடங்குகிறது களம். யாரோ ஒரு அறிவாளியால் கண்டுபிடிக்கப் பட்டு ஏராளமான அறிவும் உழைப்பும் கொட்டி செய்யப்பட்ட ஒரு குண்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் குண்டுகளில் கால் தடுக்கி இடறுவதும், எழுவதுமே படம்.

     பொருள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே வந்து விட்ட கைக்கூலி, இலஞ்சம், ஊழல் என சில குண்டுகள். தமிழின வாழ்வியலுக்குள் புதைந்து கிடக்கும் சாதியக் குண்டுகள். மதங்கள் சொல்லும் மனிதம் எனும் சொல்லை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வெளியே பொருள்தேடும் வணிகக் குண்டுகள், காசு பணம் என்று வரும்போது மனிதநேயத்தைச் சிதறடிக்கும் அதிகாரக் குண்டுகள், பெருமுதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்ட அரசியல் குண்டுகள், தான் இறந்துபோவோம் என்பதைக் கூட மறக்கடிக்கிற ஆதிக்கக் குண்டுகள் என நம்மைச் சுற்றி புதைந்து கிடக்கிற; எப்போது வேண்டுமானாலும் வெடித்துவிடும் அபாய நிலையில் இருக்கிற ஆயிரமாயிரம் குண்டுகளை நினைவு படுத்துகிறது படம்.

    படம் முடிந்து அரங்கை விட்டு வெளியே வரும்போது ஆயுத ஒப்பந்தம், DEFENSE CORRIDOR போன்ற குண்டுகள் உங்கள் ஆழ்மனதில் வெடிக்கத் தொடங்கியிருந்தால்; காகிதக் கொக்கு ஒன்று உங்கள் கைகளில் இருப்பதுபோல் நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு மிக்க நன்றி. வரும் தலைமுறையின் வாழ்நாளைக் குறைப்பதை நீங்கள் விரும்பவில்லை. எல்லோருக்குமானது இந்த உலகம் என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் இருக்கிறது.

      காட்சிகள் படமான விதம் இயல்பாய் இருக்கிறது. இசையிலும் மண்ணின் மணம். திரைப் படங்களில் காடப்படாத தமிழ் நிலத்தின் பக்கங்கள் இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன என உணர்த்துகின்றன இசையும் படப்பிடிப்பும். தென்மேற்கில் இருப்பவன் தெரிந்து வைத்திராத வடகிழக்கின் வாழ்வியலை சின்னச் சின்னக் கோலங்களாய் வரைகிறது திரை. அறியாத பண்பாட்டுக் கூறுகளை தெளிவாய் அறிமுகம் செய்கிறது. வாணம்பூ சுற்றிய தெற்கத்திக் கைகள் மாவளி சுற்றுவதன் கூறை, புரிந்து கொள்ளும் விதமாய்ப் பரிமாறுகிறது. பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் எழுவதற்கானவையே அன்றி அடிமைப்படுவதற்கு அல்ல என்பதும், பொருளியலும் சாதியமும் புனைந்து வைத்திருக்கும் கதைகள் உடைக்கப் படவேண்டும் என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்பி நிற்கிறது.

     இரண்டாம் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். பல காட்சிகளில் முகவெளிப்பாடுகள், உடல்மொழிகள் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதுபோன்ற மண்ணின் படங்களை எடுக்கத் துணியும் இயக்குநர்களுக்கு அன்பான வேண்டுகோள் நடிகர்கள் தேர்வில் மிக மிக கவனமாக இருங்கள். யாரோடும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதுவே உங்கள் கதைக்களத்தை மிகத் தெளிவாக எங்கள் முன்னே நிறுத்திவிடும். நீங்கள் பேச நினைக்கிற அரசியலைப் படம் பேசிவிடும்.

   படக்குழுவிற்கும் இயக்குநர் அதியன் ஆதிரைக்கும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித்திற்கும் பாராட்டுகள்.

    இறுதியாக ஒன்று. ஒரு நல்ல படம் தர முனைகிற இயக்குநர்களைப் போல நல்ல படத்தைப் பார்க்க முனைவதற்கும் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஒன்று, இந்த நிலம் குறித்தான அதன் மக்கள் குறித்தான பகுதிவாரியான அறிவும் புரிதலையும் பெற்றுக் கொள்வது. அல்லது, இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு போன்ற படங்களைப் பார்க்கும் போது இதற்கு முன் படித்து வைத்திருக்கும் Modern புனை கதைகளையும், இந்த நிலத்தின் வாழ்வியல் அல்லாத கதைகளையும், படங்களையும் முற்றாக மறந்து விடுவது. செவ்விலக்கியப் பரிச்சயம் இல்லாத நம் மீது கற்பிதங்களாய் போர்த்தப் பட்டிருக்கும் கதைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டுக் கொள்வது. அதுவே வாழ்வியல் சார்ந்த இலக்கியங்களாக வருங்காலத் திரைப்படங்களை மாற்றக் கூடும். 

என்றென்றும் அன்புடன்
சிராப்பள்ளி ப.மாதேவன்
11-12-2019


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்