Friday 15 April 2022

எங்கள் முகம்

 

பார்க்கும் நொடிகளின் உணர்வுகளை எழுத்துகளில் உயிர்ப்போடு பதிவு செய்து விடவேண்டுமென்ற வேட்கையோடு, மனதுக்குள் எப்பொழுதும் எழுத்துகளைக் கோத்துக் கொண்டிருக்கும் என் முன்னே; காலத்தின் பதிவாய்த் தொடங்கிய  இந்தத் திரைப்படம். நான் மறந்துபோயிருந்த நொடிகளையும் நினைவுபடுத்திக் கொண்டே மெல்ல நகரத் தொடங்கியது.

ஊசி போட்டால்தான் அரங்கிற்கு வரவேண்டும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து; படம் பார்க்க ஊசியா? நோயச்சம் கூட புறந்தள்ளி வைத்த ஊசியை படம் பார்க்கவென்று போடுவோமா? படம் பார்ப்பதையே தள்ளிப்போட்டிருந்தேன். வணிகம் வாசலுக்கு வரத்தானே செய்யும். வந்தது. இணையத்தில் நேற்று பார்த்தேன். இதைக் குறித்து பலரும் நிறைய பேசிவிட்டார்கள். என் பங்கிற்கு...


பெருங்குடும்பமொன்றின் "கடைசி விவசாயிக்கு" மகனாகப் பிறந்து எண்பதைத் தாண்டிய அவரது வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் கேட்டும் கண்டும் வளர்ந்த எனக்கு, பொத்தான் அறுந்துபோய் முடிச்சிட்டு இறுக்கிய நிக்கரும், சட்டையணியாத வெற்றுடம்புமாய், சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு எங்கள் ஊரையே பார்ப்பது போலிருந்தது இந்தத் திரைப்படம்.

சிற்றூர்களின் நுண்ணிய வாழ்வியலை எழுத்தாக வடிக்கும் போதே மிகவும் கூர்மையாக, படிப்பவர் அறிந்திருக்கிற சொற்களால் எழுதவேண்டிய கட்டாயம் இருக்கும். அதையே திரைப்படமாக ஆக்கும்போது இன்னும் கடினம். காட்சிகளின் பெரும் பரப்பை எல்லோரும் கவனிப்பார்களா? தொலைவில் தெரியும் சின்ன அசைவுகளால் காட்சி செறிவடைவதை உணர்வார்களா? என்பதையெல்லாம் நூறு விழுக்காடு உறுதி செய்ய முடியாத நிலையில் "கடைசி விவசாயி" போன்ற திரைப்படங்களை நாம் பாராட்ட வேண்டியிருக்கிறது.

சிற்றூர் ஒன்றின் வாழ்வியலை சிறப்பாகப் பதிவு செய்த இயக்குநர் மணிகண்டனுக்கு நல்வாழ்த்து. ஆனால் அதை, அந்த உணர்வை நாம் எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதுதான் வினா.

மாலை வேளையில் கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைக்கப் படுகிற யானையை, திருவிழாக்களில் தேரை உந்தித் தள்ளுகிற, காட்டுக்குள் மரத்தடிகளைச் சுமந்துசென்று அடுக்கி வைக்கிற யானைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அப்பொழுதெல்லாம் அதன் முன்னங்கால் உயரம் கூட இல்லாத ஒரு மனிதன் அந்தப் பேருயிரை அடக்கி ஆள்வதை எண்ணி வியந்திருக்கிறீர்களா?

ஏதோ ஒரு காட்டுக்குள் என்றோ ஒரு காலத்தில் யாரோ ஒரு மனிதன் கருவிகள் ஏதுமின்றி முதன்முறையாக ஒரு யானை மீது ஏறி அமர்ந்து தன் குரலால் அதை அடிபணிய வைத்தான் என்பதை பெரு வியப்போடு நாம் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் "நீ மட்டும் அவர காப்பாத்தல யேய் கருப்பா அப்புறம் நீ எதுக்கு இருக்க" என்ற குரலின் உறுதியையும் வியப்போடு நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக ஊடகத்தில் எது நடந்தாலும் அதைக் குறித்த அறிவைத்தேடி வாதங்களில் நேரம் செலவிடுகிற நமக்கு அய்யனாரோடு கோவித்துக் கொண்டு சண்டையிடுகிற மூதாட்டியை எளிதாக உணர்ந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அது பற்றிய கவலை ஏதுமின்றி அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 கேட்கும் திறன் இல்லாத அந்த எண்பது வயதுப் பெரியவரின் உலகம் மரபுகளாலும், அன்பாலும், இயற்கை மீதான நம்பிக்கைகளாலும், மரபறிவாலும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. அது அவருக்கு முன்னமே இருந்து வருகிறது என்ற அசையா நம்பிக்கையில் அதைக் கடந்து செல்லும் வாழ்க்கையையே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செலுத்தும் அன்புகூட தனது என்ற எண்ணம் அவரிடம் இல்லை. சிறகுகளின்றி மண்ணில் நடக்கிற பட்டாம்பூச்சி அவர். எங்கள் ஊரிலும் இப்படி ஏராளமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.

காட்சிகளில் இயல்பின் வெளிப்பாடு. சிற்றூர்களுக்கே உரிய சமநிலைத் தன்மை. ஒப்பனையில்லா அன்பின் வெளிப்பாடுகள். ஒற்றைச் சொல்லில் பொறுப்பை ஏற்றுக்கொள்கிற உறுதி. எளிமை.

"பழனிக்கு போனேன்..முருகன பாக்க"

"பாத்தியா?"

"ஆமா..."

"என்ன சொன்னான்?"

இப்படியான உரையாடலை பின்புல ஒப்பனைகள் ஏதுமின்றி கையில் அள்ளி எடுத்தக் கவளம் சோற்றோடு உங்கள் வீட்டுத் திண்ணையில் கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்?

மர்டுக்சும், அல்காதிரும், மெக்சிகோவும், கதிர்காமமும் நினைவுக்கு வந்து பழந்தமிழர் வரலாற்றை நினைவுபடுத்தினார்கள் என்றால் நீங்கள் உங்கள் திண்ணையில்தான் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை உணரலாம். இல்லையென்றாலும் கவலைப்பட ஏதுமில்லை, நீங்கள் விதை நெல்லை விட்டுவிட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டீர்கள் அவ்வளவே.

சித்தம் பேதலித்த மகனிடம் "சாப்பிடு, ஒரு சேதி சொல்லணும்" என்று கூறி உணவு உண்ணும் வரைக் காத்திருந்து பிறகு "தோட்டத்துல மூணு மயிலு செத்துக்கெடந்துச்சு" என்று சொல்கிற பட்டறிவில் அன்பின் வெளிப்பாடு மிகுதி. 

இந்தப் படமும் அப்படித்தான். உங்கள் பட்டறிவும் உணர்வும் உங்கள் இரு கண்களாய் இருந்தால் பார்க்கும் போது அந்தச் சிற்றூரின் தெருக்களில் நடந்துபோக இயலும். இல்லையென்றால் "காடு இல்லைன்னா நான் காலைல எந்திரிச்சு என்ன செய்வேன்? பணத்த கைக்கடியில வச்சுகிட்டு படுக்க சொல்றியா? காட்ட தரமாட்டேன்" என்கிற சொற்களின் ஆழம் அறியாது வெறுமையில் தடுமாறுவது போலிருக்கும்.

எம் மண்ணின் வாழ்வியலை உலகத்திற்குக் காட்டுவதற்கான அத்தனைத் தகுதியையும் பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம். கொண்டாட வேண்டிய திரைப்படம். புரிந்து கொண்ட உணர்வு தோன்றுகிற வரை மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டிய படம். 

தற்சார்பு குறித்து ஏராளம் பேசுகிறோம். குழந்தைகளை அதை நோக்கி நகர்த்த முனைகிறோம். ஆனால் வணிக உலகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிற நம் மனம் தற்சார்பை பொருளோடு வைத்தே எண்ணுகிறது. பணம் இல்லாமல் தற்சாற்பு இயலாது என்று எண்ண வைக்கிறது. இது வணிகத்தின் வெற்றி. 

இதை உடைத்தெறிய உணர்வு மேலோங்க வேண்டும். தற்சார்பு உணர்வில் துளிர்த்தெழும் ஒரு ஆலமரம். "கடைசி விவசாயி" போன்ற திரைப்படங்கள் நம் மனதுக்குள் மெல்ல மெல்ல அந்த உணர்வைத் தட்டியெழுப்பும். நாம்தான் சாளரங்களைத் திறந்து வைக்க வேண்டும். 

வாய்ப்பிருப்பின் உணர்வு பெறுங்கள். உங்கள் சாளரத்தின் வழியே எங்கள் முகம் பாருங்கள். நன்றி.

1 comment:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்