Wednesday 5 October 2022

வள்ளலார் 200

 



ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்/

பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்/

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்/

யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.'/ :-

(உய்வகை கூறல் - வள்ளலார்)

தருக்கம் மனிதகுலத்தின் பெருஞ்சொத்து. சரி அல்லது தவறு என்பதே தருக்கத்தின் படி இறுதி செய்யப்படவேண்டும். மனிதன் என்று தொடங்கும்போதே குறைந்தது ஐம்பதினாயிரம் ஆண்டுகளையாவது நாம் மனதில் உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மனிதன் பலவாறான சிந்தனைக்கு ஆட்பட்டவன். இல்லையென்றால் 

மற்றைய விலங்குகளிலிருந்து இத்தனை வேறுபட்டு இந்த மாற்றத்தை அடைந்திருக்க மாட்டான். கூர்ந்து நோக்கினால், வரையறையற்ற சிந்தனையே இந்த வளர்ச்சிக்கு அல்லது வளர்ச்சிதை மாற்றத்திற்குக் காரணம். வெளிப்பட்ட பின்தான் ஒரு சிந்தனை, பிறருடனோ அல்லது தன்னுடனோ  நிகழும் தருக்கத்தின் மூலமாகச் செழுமையடைகிறது.

தன்னுடன் வாழும் மனிதன் இறப்பது, விலங்குநிலை மனிதனுக்கு பெரிய தாக்கத்தைத் தரவில்லையெனினும் சிந்தனை வளர்ந்த நிலையில் வினாக்களை எழுப்புகிறது. விபத்து, விலங்குகளால் தாக்கப்படுதல், பூசல், போர் போன்றவை போக எஞ்சிய இறப்புகள் பெரும் வினாக்களாகின்றன. உடல் அழிவது மறுக்க இயலாத உண்மையாக எதிரே இருக்கும் போது, விடைகளை நோக்கிய தருக்கம் இரண்டு பெரும் கிளைச் சிந்தனைகளுக்கு வித்திட்டிருக்கலாம்.

ஒன்று: வேறுபட்ட வயதுகளில்தான் உடல் அழிகிறதா? எனில், அது ஏன்? ஒவ்வொரு உடலுக்கும் காலக்கெடு ஏதும் இருக்கிறதா? இருக்கிறது எனில் எப்படி விதிக்கப்படுகிறது? அப்படி விதிக்கப்படுகிறது எனில் விதிக்கும் இடத்தில் இருப்பது என்ன? எங்கே

மற்றொன்று இதற்கு மாறானது. விதியை மறுப்பதால் விளைவது. ஒரே வகை உடல் வேறு வேறு காலகட்டங்களில் அழிவதற்குக் காரணம் தேடுவது. ஆற்றல் மாறுபாடுகளால், ஆற்றல் இழப்பால் உயிர்வாழத் தேவையான உள்ளுறுப்புகளின் இயக்க மாறுபாடுகளால், பசி, நோய் பருவ காலங்கள் முதலிய புறக்காரணிகளின் தாக்கத்தால் இந்த உடல் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாய் எண்ணத் தலைப்படுவது.

இந்த இரண்டுமே அழிவற்ற உடல் அல்லது இறப்பில்லாத வாழ்வு என்ற அடிக்கூறு ஒன்றின் வெளிப்பாடுகளே. இதனடிப்படையில் இந்த இரண்டு சிந்தனையாளர்களுமே செயல்படத் தொடங்குகின்றார்கள். முதலாவது மெய்யியல் (Sense The Exist). இரண்டாவது அறிவியல் (Observation and Experiment of The Exist).

இரண்டுமே ஒற்றைப் புள்ளியில்தான் தொடங்கியிருத்தல் வேண்டும். பயணங்களும் முடிவுகளும் வேறானவை மட்டுமல்ல இன்னும் இறுதியடையாதவை. அவற்றின் போக்கு; உயிர் இயக்கத்தை அறிதல்,  உடல் அழிவதைத் தள்ளிப்போடுதல் அல்லது தடுத்தல். ஒற்றை வரியில் சொல்வதானால் மரணமில்லாப் பெருவாழ்வு.

மரணத்தை வெல்வது என்பது எளிதான காரியம் அல்ல. உலகெங்கும் பலர் இந்த சிந்தனைப்போக்குக்கு ஆட்பட்டிருந்தார்கள். பல முறைகளைக் கண்டடைந்ததாய், செயல்படுத்தியதாய்க் கூறிக்கொண்டார்கள். ஆனால், மரணத்தை வெல்லும் வழிமுறையை யாரும் எளிய முறையாக மக்களுக்குச் சொல்லவில்லை. மேலே சொன்ன இரண்டாவது முறைமையின் வழி நாமும் முயற்சி செய்தால் அந்த நிலைக்கு வரலாம் என்பதை முதலில் வள்ளலார் பொதுவெளியில் வைக்கிறார். அதனால்தான் மேலே குறிப்பிட்ட இரண்டு வினாக்களையும் ஒருங்கிணைத்து, இரண்டும் குறித்து ஏற்கனவே இருந்த விடைகளின் அல்லன களைந்து நல்லன சேர்த்து புது வெளிச்சமாய் ஒரு முறைமை செய்கிறார்.

அதற்கான சுத்த சன்மார்க்கம் என்ற தமது வழிமுறையில் உள்ள/உடல் மேம்பாட்டுக்கான முறைமைகளை வகுக்கிறார். அதன் படி ஒழுகியே உடலை ஒழுங்கு செய்ய இயலும் என்ற அவரது கோட்பாடு பெருவாழ்வை நோக்கிய பயணத்தின் பகுதியாகிறதே அன்றி அனைவருக்குமானதன்று.

சுத்த சன்மார்க்கம் என்பது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாலாவது நிலையில் உள்ள ஞானத்தில்; யோகம்  ன்னும் பதினைந்தாம் நிலையில் உள்ளவர்களுக்கு சொல்லியது என்றே வள்ளலார் தெரியப் படுத்துகிறார், அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் சுத்த சன்மார்க்கம் என்ன என்பதை அறிந்து, புரிந்து கொண்டு அருள் பெறுவதற்கு மேலும் முயற்சி செய்வார்கள். அவர்களுக்கே சுத்த சன்மார்க்கம் நன்கு விளங்கும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை பின் வரும் பாடலில் தெளிவுபடுத்துகிறார்.

 

ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்/

பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்/

மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்/

யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.'/

 

ஆகமாந்தம் = சிவாகமங்களின் ஞானப் பாகம்.

வேதாந்தம் = வேத முடிவுகளை உரைக்கும் உபடநிடதங்கள்.

அறைதல் = சொல்லுதல்.

பாகம் = பகுதி.

பரவெளி = அண்டவெளி

நடம் = சிவானந்தத் திருநடனம்

மோக மாந்தர் = எளிமையாக உலகியலில் வாழ்பவர்.

யோக மாந்தர் = யோகிகள், ஞானிகள்

ஆகமங்களின் முடிவும் வேதங்களின் முடிவும் எடுத்துரைக்கின்ற பரவெளியில் நடைபெறும் சிவனுடைய திருநடனத்தைப் பொருளாகக் கொண்டு போற்றி வழிபடுவீர்களாக; இதனை உலகியல் மோகத்தில் மயங்கிக் கிடப்பவர்களுக்கு நான் உரைக்கவில்லை; ஞான இன்பத்தைப் பெறக்கருதும் யோக ஞானிகளுக்குக்காகக் காலம் கருதி எடுத்துரைக்கின்றேன்.

குறளும் இப்படியொரு முறைமையின் கீழேதான் இயற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு புறங்கூறாமை, புலால் உண்ணாமை, பொய்யாமை என்பன உலகின் அனைத்து மாந்தருக்குமானது என எண்ணி அதையே வலிந்து கடைப்பிடிக்க ஆணையிட்டால், அது வள்ளுவர் மற்றும் வள்ளலார் பிழையன்று நம் பிழையே.



No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்