Thursday 6 October 2022

எட்டி! எட்டி !



சித்த மருத்துவரும், எழுத்தாளருமான ஐயா முத்துநாகு அவர்கள் 04-10-2022 அன்று எட்டிப்பழம் பறித்த நிகழ்வைப் படங்களோடு பதிவிட்டிருந்தார். படத்தில் வழமைபோல முழு கால்/கைச் சட்டையோடு காட்சிதந்தார்.

அதன் கீழே ஒருவர் "எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" என்று பழமொழியொன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
எட்டி.. எட்டி.. சட்டி புட்டி என சில சொற்கள் மனத்துள் ஓடின. வைத்தியரோடு வம்பிழுக்கும் பாட்டாக்களின் நாட்டுப்புற மொழி மரபு தோன்ற ஐயாவைக் குறித்து சிறு பாட்டொன்று எழுதினாலென்ன என்று தோன்றியது.
நாற்பது நிமிடங்கள் தாண்டும் நிலையில்தான் எல்லாச் சொற்களும் வந்து சேர்ந்து பாடல் முழுமையானது. பின்னூட்டமாக இட்டேன். மகிழ்ந்தார்.
எளிமையான தோற்றம் பெற்றிருந்தாலும் ஆழமான பொருள் கொண்டது இந்தப் பாடல்.

================================

எட்டி எட்டி எட்டி(ப்) பறித்தவர்/

எட்டி அல்ல என்ப தறிக/

கட்டி முதல் கட்டி வரை/

கிட்டி கொண்டு கிட்டி போட்டு/

சிட்டி திட்டி சிட்டி தந்து/

குட்டி காக்கும் தெட்டி போல/

இட்டி யின்றி இட்டி செய்வார்/

தட்டி செய்து துட்டி கொள்வார்/

பெட்டி கொண்ட உட்டி தானும்/

புட்டி சேர்ந்த தொட்டி தானும்/

பட்டி யாக்கும் முட்டி யாக்கும்/

கெட்டி கொண்ட கெட்டி யுண்டு/

அட்டி இன்றி ஒட்டி நிற்க/

விட்டி கண்ட கட்டி போல/

வீழும் நோய்கள் யாவுமே.

========================


சொற்பொருள் 

 

எட்டிஎட்டிப்பழம்

எட்டிவணிகர்

கட்டிகருப்பிண்டம்

கட்டிபாடை

கிட்டிநாழிகை வட்டில்

கிட்டிநெருக்கி (நேரம் தவறாது)

சிட்டிஒழுங்கு (செய்தல்)

திட்டிபார்வை (கண்காணித்தல்)

சிட்டிசிட்டிகை (அளவாகக் கொடுக்கப்படும் மருந்து)

குட்டிகன்று

தெட்டியானை

இட்டிஇச்சை

இட்டிவேள்வி

தட்டிபாதுகாப்பு

துட்டிமன நிறைவு

பெட்டிஅஞ்சறைப்பெட்டி

உட்டிவித்துகள், காய்கள்

புட்டிகுப்பி

தொட்டிவைப்பு நஞ்சு வகை

பட்டிபாதுகாப்பு

முட்டி - நஞ்சு தீர்க்கும் பண்டுவம்

கெட்டிநீண்டகால / நீடித்த

கெட்டி திறமை

அட்டிதாழ்ப்பு (தாமதம்)

ஒட்டிஒட்டி (இணைந்து)

விட்டிசிறிய வெட்டுங் கருவி

கட்டி சிலந்திப்புண்


பாடல் விளக்கம்

அதோ எட்டிப்பழத்தை எட்டிப்பறிக்கும் அவர் வணிகரல்ல. கருவில் தொடங்கி இறந்து போகும் வரையில், நேரத்தை துளி கூடத் தவறாமல் ஒழுங்கு செய்து, குறித்த வேளையில் பார்வையிட்டுக் கண்காணித்து தேவையான அளவு மருந்தளித்து, யானை தன் கன்றைக் காப்பதுபோல இச்சி இன்றி வேள்வி போல மருத்துவம் செய்வார். நோயாளிக்குப் பாதுகாப்பளிப்பதில் மன நிறைவுகொள்வார்.

அஞ்சறைப் பெட்டியில் கிடக்கும் விதைகளையும், காய்களும், குப்பியில் இருக்கின்ற பாடாண (நஞ்சு) வகைகளையும் நஞ்சு தீர்க்கும் பண்டுவத்திற்கான மருந்தாக மாற்றும் நீண்டகாலத் திறமையுள்ளவர்.

தாமதிக்காமல் இவரை அணுகி இணையும் நோயாளிகளின் நோய்கள் யாவும் வெட்டியெறியும் கருவியின் முன்னே வீழும் கட்டிகளாக காணாது மறையும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்