Sunday 24 November 2019

விடுதலையின் வேர்ச்சொல் (மாவீரர் நாள் 2019)

விலங்குகளாய் இருந்த
ஆதி நாள்தொடங்கி
குருதியின் அடியாழத்தில்
உறைந்துகிடக்கின்றன
விடுதலைப் பேருணர்வின் வேர்கள்.
எல்லைகள் என்பதும் தேசம் என்பதும்
எறும்பினத்திற்கும் உண்டென்பதே
இயற்கையின் விதி.
கழுகுகள் கடலுக்குள் வேட்டைக்குச் செல்வதில்லை.
சுறாமீன்கள் புறாக்கூடுகளைச் சூறையாடுவதில்லை.

ஆறாம் அறிவின் அகந்தை;
தாயகம் என்ற சொல்லை தகர்த்திட முனைகிறது.
ஆனைவழித்தடங்களில் சாலைகள் அமைக்கிறது.
ஆழ்கடலுக்குள் எண்ணெய் எடுக்கிறது.
விதியை மீறுகிறாய் என்று உரைப்பவரை
கொன்று புதைக்கிறது.
அச்சம்கொண்டு அடங்கி நிற்பவரின்
உச்சியில் மிதிக்கிறது.
மண்ணைத் தின்று மரங்களைத் தின்று 
பெரியவர் தின்று பிள்ளைகள் தின்று
மொழியைத் தின்று மொத்தமும் தின்றுவிட
எண்ணம் வளர்த்து இதயம் இறுக்கி
எக்காளமிடுகிறது.
 
இரண்டகம் செய்தவர் வளமுடன் வாழ,
இயலாது போயவர் ஏதிலியாய் மாற,
மண்ணும் அழுதிட நல்ல மாந்தரும் அழுதிட
இயற்கையும் அழுத பேரொலி கேளாது;
பிறந்தார் வளர்ந்தார் பிண்டமாய் இருந்தார்
பின்னொருநாள் பிணியில் இறந்தாரென்று
மந்தையாய் வாழும் மாந்தருக்கிடையில்,
மண்ணில் சிலரோ
உறைந்த வேர்களை உயிர்ப்பிக்க எண்ணி நின்றார்.

அகங்கொண்ட விடுதலைத் தாகத்தினால் - தம்
நகங்கொண்டே நரிகளின் வலையறுத்தார்.
இனத்தின்
உள்ளத்தைச் சூழ்ந்திருந்த உறைபனியை - தம்
குருதியின் செஞ்சூட்டால் உருக்குலைத்தார்.
தென்திசையில்
விண்ணதிரும் விடுதலையின் பாடலுக்கு - தம்
துவக்குகளின் குழலொலியால் இசை சேர்த்தார்.

வானிலும் பிறழாது நீரிலும் கரையாது
மண்மீது நின்றநெறி; வஞ்சகத்தின் நிழல்படிய;
வானமலை குடகடலில் தானமிழ்ந்து போனதுபோல்,
பேரினத்தின் பிள்ளைகளோ;
தாயின் கருவறையில் தாங்கிவந்த உயிர்
மாயும் இனம்காக்க மாக்கொடையாய்த் தந்தாரே.
மனிதம் மறந்துபோன மண்மேலே மாவீரரெனும்
மறையா பெயர்கொண்டாரே.

பூவுலகின் வரலாற்றை பொன்னால் வடித்தாலும்,
புண்பட்ட நன்னெஞ்சம் புலம்பிப் படைத்தாலும்,
மண்ணின் வரலாற்றை, மாந்தரின வாழ்வியலை
எழுதும் கை மறவாதே;
இறந்தும் வாழும் எம்மினத்தின் இளவல்களை.
ல்லா மொழிகளிலும்
விடுதலையென்ற சொல்லின் வேர்ச்சொல்லாய் நின்றவரை.
அடிமையாய் வாழாமல் ஆர்ப்பரிக்கும் தென்கடலாய்
மண்காக்க மாய்ந்து மாவீரர் ஆனவரை.



1 comment:

  1. Yes it's the fact.. நாம் தமிழர்
    .. அதன் பிறகு இந்தியன்

    ReplyDelete

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்