Wednesday 6 November 2019

செருக்களத் தலைவன்


கூழ் அளாவி அரண் செய்து
கூர்த்தமதி அமைச்சு சொல்லி
கோனுக்கும் அறிவுரைத்து
வாழும் மனிதருக்கும்
வழிகள் சொல்லி
மறுபால் சேராத
மன்னு துறவுக்கு
நல்விதி வகுத்து,
அறனோடு பொருள் சேர்த்து
கூடிமுயங்கி அடுநறாக் காமம்
பாடி முடித்த;
உலகத் தாய்மொழியின்
ஒப்பில்லாப் புலவனவன்.

மாந்தர்தம் வாழ்வன்றி
மண் சிறப்போ மன்னவர் சிறப்போ
கண்ணறியாக் கற்பனைச் சிறப்போ
தற்சிறப்போ ஏதும் இல்லா
சொற்சிறந்த அவன் குறளே
தமிழ்மொழியின் உயரெல்லை.

பன்னெடுங்காலமாய்த் தமிழரினம்
முன்னெடுத்த செருவொன்றின்
மூத்த படைக்கலமே
வைதிகம் அறுத்தெறிந்த
எங்கள்
வள்ளுவன் எழுத்தாணி.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்