Thursday 7 November 2019

வள்ளுவம்... இன்று நேற்றல்ல

இந்த "எண்ணம்" தான் மாந்தரினம் இந்த நொடிவரை நடந்துவந்திருக்கிற பெருவழிப்பாதையில் இடப்பட்ட முதல் கல்.
இயற்கையின் விதிவழியில் எல்லா உயிர்களுக்கும் இனப்பெருக்கத்திற்கென உடலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த "காமம்" இந்த எண்ணத்தால் மனதிற்கு மாற்றப் பட்டது. விலங்குகளாய் இருந்தபோது "உணர்வு' நிலையிலிருந்த காமம்,  உருவகப்படுத்தும் திறனும் நினைவு வலைப்பின்னலும் பொருந்திய ஆறாம் அறிவால் "உணர்ச்சி" நிலைக்கு மாற்றப்பட்டது. இப்படியொரு நிலையில்... வண்ணத்துப்பூச்சி, மயில் போன்ற உயிர்கள் வண்ணம் வடிவம் போன்ற அழகுணர்வில் இணைதேடுவதைக் கண்ட மாந்தனின் ஆறாம் அறிவு அதைப்பற்றி எண்ணத் தலைப்பட்டிருக்கக் கூடும்.

இப்படி, இன்பம் துய்ப்பதில் தோன்றிய எண்ணங்களும், தலைமைப் பண்பை நிலைநிறுத்திக் கொள்ள விழைந்ததில் தோன்றிய அறிவும் பின்னிப் பிணந்ததில் "பொருள்" என்ற பெருஞ்சொல் பிறந்தது. ஒரு நிலையில் இன்பம் துய்ப்பதற்கான நுழைவாயில் "பொருள்" என்று ஆனது.

பொருள் தேடிப் புறப்பட்ட மாந்தரினத்தின் பயணம் நாகரிகத்தின் எல்லைகளை விரித்தது. இடப்பெயர்தல் நிகழ்ந்தது. மொழிகள் பிறந்தன. புதிய தலைவர்கள் தோன்றினார்கள். எல்லைகள் வேறுவேறாயின. இனகுழுக்களுக்கு இடையே நடந்த சிறு சிறு சண்டைகள் எல்லைகளுக்கு இடையே நிகழும் பெரும் போர்களாயின.

தலைமையும் அறிவும் முன்னிலை பெற்றன. கதைசொல்லிகள் தோன்றினார்கள். வீரத்திலும் அறிவிலும் தலைவர்கள் பட்டியலிடப்பட்டார்கள். 

தமக்கிடையே பொருள்குறித்து நடக்கும் போர்களில் தம்மினமே அழியக்கண்டு, பொருளீட்டுதற்கும், உயிர்க்கொலைக்கும் சில அறங்களை வகுத்துக் கொண்டார்கள். அவற்றையும் விலங்குகளிடமிருந்தே கற்றுக் கொண்டார்கள். புலி பசியில்லாதபோது மானைக் கொல்வதில்லை. தன்னோடு உண்ணவரும் சக உயிர்களை உண்ண அனுமதிக்கும். வெறும் உயிர்க்கொலை செய்வதில்லை. தலைமையை ஏற்று வழிநடக்கும்.  ஆண் புலிகள் பெண்புலிகளைப் பாதுகாக்கும். இந்தப் பண்புகளெல்லாம் புலியிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. சோழர்களின் புலிச்சின்னமும் இதன்காரணமானதாக இருக்கலாம். 

 இணைசேரவோ, உணவு பகிர்ந்துண்ணும் போதோ சண்டையிடும் விலங்குகள் ஒன்றையொன்று கொலைசெய்யும் நோக்கில் இருப்பதில்லை. துரத்துவதில்தான் நோக்கம் வைத்திருக்கும். வல்லமையில்லாத விலங்கு தன் தோல்வியை உணர்ந்து நகர்ந்து சென்றுவிடும். இந்த விலங்குப் பண்பையெல்லாம் அறமென மதித்து தன் அறிவில் இணைத்து, எல்லா விலங்குகளின் ஒற்றை வடிவமாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிகத்தின் உச்சியை நோக்கி நகர்ந்துவிட்டது மாந்தரினத்தின் ஒரு பெருங்கூட்டம்.

இடம்பெயர்ந்துபோன சில இனக்குழுக்கள் விலங்குகளோடும், நாடோடித் தன்மையோடும் இந்தக் கூட்டத்தோடு இணைந்துவிட வந்தன. இரண்டு வெவ்வேறு நிலையில் இருந்தவர்களால் உடனடியாக இணைய முடியவில்லை.

 ஏற்கனவே நாம் பார்த்தோமே "தலைமை"க் குணம் என்பது விலங்குப் பண்பு என்று (சொல்லப் போனால் இன்றுவரை நாம் கடைப்பிடித்து வரும் பண்பு) அது எல்லா மாந்தருக்கும் பொருந்தும். அதனால் அவர்களும் தலைமையேற்கத் தலைப்பட்டார்கள்.

ஆனால்.... நீண்ட நெடிய இந்த நாகரிகப் பயணத்தில் அவர்கள் குறுக்கு வழியில்தான் நுழையவேண்டி இருந்தது. இந்தச் செய்கை இங்கே செம்மையாக நின்றுகொண்டிருந்த வீரத்தின் மீதும், அறிவின் மீதும் அது சார்ந்த அறத்தின் மீதும் நசிவை ஏற்படுத்தியது. பொருளுக்கும் இன்பத்திற்கும் குறுக்குவழிகள் பிறந்து, பல்லாயிரம் ஆண்டுகள் வளர்ந்த அறம், நாகரிகம் சிதைவுற்றது.

இப்படி சிதைந்து நின்ற சில நூறாண்டுகளில், தம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையும் நடந்துவந்த பாதையும் மறந்துபோன ஒரு கூட்டத்தின் நடுவே பல்லாயிரமாண்டு வாழ்க்கையின் சாற்றை வடித்தெடுத்து, வாழும் வழி சொல்லி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்ப்போகிற மாந்தர்களுக்காக வைத்துவிட்டுப் போகிறார் வள்ளுவர்.


(மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய எனது "காமத்துப் பால்" கட்டுரையின் ஒரு பகுதி) 

https://youtu.be/QWyzFir5YuE

சிராப்பள்ளி ப.மாதேவன்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்