Friday 19 April 2019

டூலெட் - TOLET


நகரமயமாக்கலின் முகாமையான பிரச்சனை வீடு. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களின் நிலை மிகக் கடினம். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் அது சார்ந்த தொழில்களும்; நடுத்தர மற்றும் குறைந்த வருவாயுள்ள ஏராளமான குடும்பங்கள் மீது கஜா புயலாக வீசிவிட்டுச் சென்றுவிட்டது. அப்படியொரு சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு குடும்பத்தின் கதையாக ஆனால் ஒட்டு மொத்த அவலத்தின் ஒன்றரை மணி நேரக் காட்சியாக விரிகிறது "டூலெட்" திரைப்படம்.

நீங்கள் எதோ ஒரு கிராமத்தில் குறைவான பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? இல்லை சென்னையில், சிறியதானாலும் சொந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறீர்களா?  இந்த இரண்டில் எதுவானாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்கள் எல்லைகளுக்கு வெளியே; திமிற நினைத்துக் கொண்டு திமிற முடியாமல், ஓடி ஒளிய நினைத்து அதுவும் முடியாமல், ஓவென்று அழ நினைத்தும் கேட்பார் யாரும் இல்லாமல், எல்லா நாளும் அவலத்தின் காற்றை மூச்சாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எண்ணற்றோர். அவர்களை நம் மனதில் முழுதாகப் படிய வைத்துவிட முயல்கிறது படம். அதற்கு நாம் அனுமதிக்கா விட்டாலும் நம் மனதுக்குள் ஒன்றைரை மணி நேரம் வாடகைக்காவது வாழ்ந்து விட்டுப் போய்விடுகிறார்கள் இளங்கோவும், அமுதாவும் அவர்களின் மகன் சித்தார்த்தும்.

அத்தனை அழுத்தம் படத்தின் காட்சிகளில் விரவிக்கிடக்கிறது.

நீங்கள் எப்போதாவது வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறீகளா? அதுவும் ஒண்டுக் குடிதனங்களில்? ஆம் என்றால், வாடகை தர இயலாத தேதிகளில் செருப்பின் ஓசையின்றி படியிறங்கிய நாட்கள் உங்கள் நினைவுகளில் இருக்கக் கூடும். எண்ணெய் இல்லாவிட்டாலும் எச்சில் தொட்டேனும் கிறீச்சிடும் கதவுகளின் ஓசை அடக்கி,  திறந்து மூடிய பொழுதுகள் உங்கள் நாட்குறிப்புகளில் இருக்கும். உங்களால், உங்கள் மனைவியால், குழந்தையால், ஏன் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியால்; எவ்வளவு ஓசை எழுப்ப முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆம் வாடகை வீட்டில் இருப்போருக்கு ஓசையின் அளவறியும் உரிமை கூட இல்லை. அதனால் தான் என்னவோ படமும் எந்தப் பின்னணி இசையும் இன்றி இருக்கிறது. அதுவே படத்தின் உயிர்ப்பும் கூட.

நம் படுக்கை அறைக்குள் மனைவியுடனான தனிமையான நெருக்கங்களில், திடுப்பென்று  குழந்தைகள் நடு இரவில் நுழைந்துவிட்டால்; நினைக்கவே சற்று கடினமான நிலைதான். ஆனால் நிறைய பேருக்கு ஒற்றை அறைக்குள் குழந்தைகளை வைத்துக் கொண்டே காதலித்து, காமமுற்று, ஊடல் கொண்டு, சண்டையிட்டு வாழ வேண்டிய வாழ்க்கையே வாய்த்திருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கையை இயக்குநர் செழியன் திரையில் வரைகிறார்.

 நிறைய மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன என மெலிதான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இருக்கலாம், அல்லது நிறைய சொல்லப்படாமல் இருக்கிறது என்ற ஒரு பேச்சு கூட வரலாம்.

எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அறையின் வாசலில் வந்து நின்று வந்திருக்கும் நண்பர்களின் செருப்பை எண்ணிவிட்டுச் செல்வார் ஒரு வீட்டு உரிமையாளர். மாத வாடகை கொடுக்கும் போது "இந்த மாசம் பூரா 15 பேரு உன் ரூமுக்கு வந்துட்டுப் போயிருக்காங்க, செப்டிக் டாங்க் நெறைஞ்சு போச்சு. 60 ரூபா வாடைகையோட சேத்து குடுப்பா" என்று கேட்பார். 90களில் இது எனது நேரடி அனுபவம்.  போன ஆண்டில் வீட்டுச் சாமான் முழுவதையும் வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு வீடு தேடி அலைந்த நண்பரையும் நான் இன்னும் மறக்கவில்லை.

சென்னையின் வாடகை வீட்டு வாழ்க்கையின் நெருக்குதல்கள் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மிகைப்படுத்தல்களைவிட அதிகம் என்பதை அப்படி வாழ்பவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பெருநகரொன்றின் பெரும்பான்மை வாழ்க்கையின் முகாமையான ஒரு பகுதியை எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி அழகாய் அழுத்தமாய் பதிவு செய்து, திரைப்படங்களின் இன்னொரு சாளரத்தையும் திறந்திருக்கிறது "டூலெட்". வாழ்த்துகள் செழியன். உங்கள் வாடகை வாழ்க்கையின் தடம் திரைப்பட விரும்பிகளின் உள்ளங்களில் நீண்ட காலத்திற்கு இருக்கும். 

சிராப்பள்ளி ப.மாதேவன்,
19-04-2019

2 comments:

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்