Saturday 6 April 2019

காதல் கண்ணி - 1


 

 

............................. வாழ்த்து.....................

======================================

உண்டென உரைத்தவர் கண்டது மொழிந்திலர்

இல்லென உரைத்தவர் சொன்னது நிறுவிலர்

பண்டு பல்கிய அண்டமென் றொருபொருள்

பிண்டங் களாக்கிப் பின்னிப் பகுத்து

மலையும் மண்ணும் மழையும் வெயிலும்

காற்றும் புயலும் சூறா வளியும்

தூசு நிறைந்த துடிப் பாலைகளும்

ஆறும் கடலும் வானும் நிலவும்

ஊனும் உயிரும் ஒருங்கிக் கலந்து,

காணும் பல்லுயிர் நாளும் பெருக்கிய

மாசறு இயற்கை மாவடி தொழுவோமே

 

 ......................நாஞ்சிநாட்டெல்லை........................

 

வண்டமிழ் நாட்டின் தென்கரை தழுவும்

கொற்றவை பொன்னடிக் குமரிக் கடல்முதல்;

வடக்கி லோங்கிய வளமிகு தாடகை

மலையிடை விரியும் மயங்கா மருதமும்,

 

குணகடல் தழுவும் கோட்டையின் மதிலொடு

குடகடல் கரையிருங் கொல்லங் கோட்டின்

நீரோடிக் கரைவரை வேரோடும் நெய்தலும்,

 

அதங்கோடு அடியிறங்கும்

பெருங்கோடு வானமலை

அருள்செயக் கிடைத்த

பன்றிக்கோடும் பழையாறும்,

பேச்சிப்பாறைப் பெருநீரும்,

வட்டப்பாறை கீரிப்பாறை

வழிநடந்து கீழிறங்கி

நெட்டெனப் பாயும்

உலக்கை அருவியென

பெருவழி முழுவதும்

பரவிய குறிஞ்சியும்,

 

கடுக்கரை மலைதொட்டு

பூதையின் வடக்குயர்ந்து

பணகுடிப் பாதைவரை

படர்ந்திட்ட முல்லையும்,

 

ஔவையின் அடிதொட்டு

மூப்பன்தரம் முன்நிற்க

கைக்கெட்டும் தூரத்தில்

கரந்துறையும் பாலையும்,

 

நிலம்தின்றக் கடலுக்குள்

நின்றிருக்கும் வள்ளுவர்தன்

உயர்பார்வை கொண்டு

ஊர்ந்து பார்த்திட்டால்;

 

மலைக்குச் சூடிய மாலையென நெய்தலும்;

மலைநின்று இறங்கிய மருதப் பரவலும்;

வானமலை தலையில் வளங்கெழு குறிஞ்சியும்;

இடையில் ஆரமென இழையும் முல்லையும்;

ஆரைவாய் அடுத்தப் பாலையின் தொடக்கமும்;

 

பாட்டன் தொல்காப்பியன் பகர்ந்தத் திணையனைத்தும்

ஏட்டில் இருப்பதுபோல் கூட்டாய் இருக்குமொரு

நாட்டில் நன்னாடாம் நாஞ்சில் நாடதுவே.

 =================================

இணைக்குறள் ஆசிரியப்பா

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்